திருநள்ளார் சனி பரிஹாரம்
தோஷ நிவர்த்தி, பரிஹாரத்தை சனிக்கிழமைகளில் செய்வது உகந்தது என்று கூறப்படுகிறது.இருப்பினும், இங்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் செய்யலாம். பெரும்பாலும் கோவிலில் சாதாரண கூட்டமே உள்ளது. முக்கிய நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் அரை மணி - ஒரு மணி நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வந்துவிடலாம்.
திருநள்ளாறு வந்தவுடன், முதலில் உங்கள் வசதிக்கு தக்கவாறு தங்க ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். நிறைய ஹோட்டல்கள் இருக்கின்றன. ரூ.30 முதல் ரூ.1500 வரை அறைகள் கிடைக்கின்றன. ரூ.30க்கு தேவஸ்தானத்தின் 'டார்மிட்டரி' கிடைக்கிறது.
ஏழரை சனி பரிஹாரத்திற்கு நீங்கள் செய்ய வேண்டியது :
(குறிப்பு: எளிய பரிகாரம்தான். நான் கீழே எழுதியதை படிக்கும்போது ஏதோ நிறைய செய்யவேண்டும் போல் இருக்கும். கவலை படாதீர்கள். அரைமணி நேரத்தில் செய்து விடலாம்.)
1. நளன் குளத்தில் ஸ்நானம்
- (கருப்பு நிற வஸ்திரம் அணிந்து குளத்தில் இறங்கி ஸ்நானம் செய்வது சிறப்பு என்கிறார்கள். முடிந்தவரை ஊரில் இருந்து வரும்போதே உங்களுக்கு தேவையான கருப்பு நிற வஸ்திரத்தை வாங்கி வரவும். குளக்கரையில் இருக்கும் கடைகளில் விற்கும் வஸ்திரங்கள் முன்பே உபயோகம் செய்தவை. எனவே முடிந்தவரை அவற்றை தவிர்த்து விடுங்கள். )
- நகை, மற்ற அணிகலன்கள், மணிக்கட்டில் கட்டி இருக்கும் காப்பு கயிறுகள், வெள்ளி அரைஞான் முதலியவற்றை கழற்றி விடுங்கள்.
- தலை முதல் கால் வரை எள் எண்ணெய் தேய்த்து , பின்னர் தண்ணீரில் இறங்கவும்.
- நீரில் மூன்று முறை முங்கி எழவும். (முழுவதும் முங்க வேண்டும்)
- பின்னர் சீயக்காய், அல்லது ஷாம்பு தேய்த்து குளித்து விடவும்.
- குளித்தப்பின் புதிய துண்டு / வேஷ்டியை சற்று மேலாக சுற்றிக்கொண்டு நீங்கள் அணிந்து இருக்கும் உள்ளாடை, மற்றும் துண்டு ஆகியவற்றை கழற்றி நீரில், அல்லது படியில் போட்டு விடவும் (இதை படியில் நின்று கொண்டு செய்யவும். எக்காரணம் கொண்டும் படிக்கரையை விட்டு முழுவதுமாக வெளியே வந்துவிடாதீர்கள்).
- பெண்களுக்கு என்று துணி மாற்றும் அறைகள் படிக்கரையிலேயே அமைக்கப்பட்டு உள்ளன.
- துணிகளை கழற்றி விட்டப்பின், திரும்பி பார்க்காமல் தலை துவட்டி, புதிய ஆடைகளை அணிந்து கொள்ளவும்.
- குளத்தின் நீர் அவ்வபொழுது மாற்றபடுகிறது. இருந்தாலும் குளத்தை சுற்றி இருக்கும் இலவச குளியல் அறைகளில் நீங்கள் மீண்டும் சுத்தம் செய்து கொள்ளலாம். திருப்பதி போன்று இங்கும் சுத்தபத்தமாக வைத்து இருக்கிறார்கள்.
- பிள்ளையார் கோவில், நளன் குளத்தின் ஒரு கரையில் அமைந்து உள்ளது.
- அருகில் இருக்கும் கடைகளில், ஒரு தேங்காயும், கற்பூரமும் வாங்கி கொள்ளவும்.
- கோவிலில் இருக்கும் பிள்ளையார், முருகன் மற்றும் பைரவரை நீங்கள் வாங்கிய தேங்காய் கற்பூரத்துடன் வணங்கி விட்டு வெளியே வரவும்.
- வெளியே வந்தவுடன் கோவிலுக்கு அடுத்து இருக்கும் சிதறு தேங்காய் உடைக்கும் இடத்தில் கிழக்கு நோக்கி நின்று, கையில் இருக்கும் தேங்காயின் மீது கற்பூரம் ஏற்றி, மூன்று முறை உங்கள் தலையை, நீங்களே சுற்றிக்கொள்ளவேண்டும்.
- சுற்றி முடித்தப்பின், கோவிலை பார்த்தவாறு திரும்பவும். கற்பூரத்தை அங்கு இருக்கும் தொட்டியில் கொட்டிவிட்டு, பின்னர் சிதறு தேங்காய் உடைக்கவும்.
- தேங்காய் உடைத்தபின், அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வரவும்.
- அர்ச்சனை தட்டு ஒன்றை வாங்கி கொள்ளவும். அதில், தேங்காய், பழம், எள் எண்ணெய் பாக்கெட், தாமரை, நீல நிற மலர்ச்சரம் இருக்குமாறு பார்த்து வாங்கி கொள்ளவும்.
- இங்கு இலவச தரிசனம், ரூ.50 தரிசனம், ரூ.200 தரிசனம் என்று 3 வரிசைகள் இருக்கிறது. உங்களுக்கு விருப்பமான வரிசைக்குள் செல்லவும். (இலவச தரிசனத்தில், சனி பகவானை தூரத்தில் நின்றுதான் பார்க்க முடியும்)
- சனி பகவானை சந்நிதிக்கு அருகில் வரும்போது, வரிசைக்கு அருகில் நிற்கும் குருக்களிடம் தேங்காய் உடைத்து பெயர் , நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.
- சனி பகவான் சந்நிதிக்கு திரும்பும் இடத்தில், உண்டியலுக்கு அருகில் இருக்கும் அண்டாவில் எண்ணெய் பாக்கெட்டை போட்டு விடுங்கள்.
- எண்ணெய் பாக்கெட்டை போட்டப்பின், வலது பக்கம் இருக்கும் அம்பாள் சந்நிதியில், அம்பாளை மறக்காமல் தரிசனம் செய்யுங்கள்.
- அடுத்து சனிஸ்வரர் சந்நிதிக்கு வந்தவுடன்,அர்ச்சகரிடம் நீல நிற மலர் சரத்தை கொடுத்து விட்டு, தீப ஆராதனையில் கலந்து கொள்ளவும். ( சில சமயம், கூட்டம் குறைவாக இருக்கும்போது அர்ச்சகரிடம் காசு கொடுத்தால், உங்களுக்கு என்று ஸ்பெஷல் அர்ச்சனை செய்வார். விருப்பப்பட்டால் செய்து கொள்ளுங்கள்)
- இங்கு சனி பகவான் 'அனுக்ரஹ மூர்த்தி'யாக இருப்பதால், அர்ச்சனை செய்த தேங்காய் பழம் ஆகியவற்றை வீட்டிற்கு எடுத்து செல்லலாம்.
- சனீஸ்வரரை தரிசனம் செய்தபின், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நிதிக்கு செல்லவும். அங்கு தாமரை மலரை கொடுத்துவிட்டு , சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, அடுத்த அறை சென்று அங்கு இருக்கும் மரகத லிங்கத்தை த்யானிக்கவும்.
- மூலவரை தரிசனம் செய்தபின், மறக்காமல் எள் எண்ணெய் தீபம் வாங்கி போடவும்.
- தீபம் போடும் இடம் ஆலயத்தின் உள்ளே இருக்கும் ஆபீசுக்கு அருகில் உள்ளது.
- அங்கேயே தீபத்திற்கு சீட்டு கிடைக்கும். ரூ.5 குடுத்து ஒரு சீட்டு வாங்கி, தீபம் போடும் இடத்தில் உள்ள ஊழியரிடம் குடுத்தால் ஒரு புதிய எள் அகல் விளக்கு ஒன்று குடுப்பார்.
- அங்கு இருக்கும் மேசைகளில் ஒன்றில் தீபத்தை ஏற்றி வையுங்கள். (குறிப்பு: தீபம் ஏற்றுவதர்க்கு என்று அங்கு சில காமாட்சி விளக்குகள் உள்ளன. அவற்றை கொண்டு மட்டும் உங்கள் தீபம் ஏற்றவும். மற்றவர்கள் ஏற்றிய தீபத்தில் இருந்து ஏற்ற கூடாது)
- தீபம் போட்டப்பின் பக்கவாசல் வழியாக வெளியே வந்துவிடவும். தோஷம் கழிப்பவர்கள் எக்காரணம் கொண்டும் பிரதான நுழைவாயில் வழியாக வெளியே வர கூடாது.
- அன்னதானம் செய்ய விரும்புபவர்கள், கோவிலுக்கு வெளியே விற்கும் எள் சாத பொட்டலங்களை வாங்கி, நலன் குலத்தின் அருகில் இருக்கும் முடியாதவர்களுக்கும், சாதுக்களுக்கும், அன்னதானம் செய்து விடலாம்.
- பக்தர்கள் தோஷம் கழித்தப்பின், ஒரு இரவு கோவிலில், அல்லது கோவிலுக்கு அருகில் (ஹோட்டல், அறைகள், சத்திரம்) தங்கி, மறுநாள் காலையில் ஊர் திரும்ப வேண்டும்.
- தோஷம் கழித்தப்பின் வீடு திரும்பும் வரை, வேறு எந்த கோவிலுக்கும் செல்லாதீர்கள். வழியில் யார் வீட்டுக்கும் செல்லாதீர்கள்.
-- நன்றி --
stay at thirunallar is a must?
ReplyDeleteYes. Night stay at Thirunallar is a must for people who want to do Dhosha Nivarthi.
DeleteThank you
ReplyDeleteதிருநள்ளாறு சென்று திருப்பதி செல்லலாமா
ReplyDeleteதிருநள்ளாறு சென்று பரிஹாரம் செய்த பின், உங்கள் வீட்டிற்கு திரும்பி செல்லுங்கள். வீட்டிற்கு சென்று ஒரு நாள் கழித்து எந்த கோவிலுக்கும், அல்லது திருத்தலத்திற்கும் செல்லலாம்.
Delete